இன உணர்வுடன் கோஷம் போட்ட என் மீது அரசியல் சாயம் பூசுகிறார்கள்- மதுரை பெண் சிறப்புப் பேட்டி

சிறப்புப் பேட்டி

ஜல்லிக்கட்டு போராட்ட களத்தில் 'சின்னம்மா சின்னம்மா ஒபிஎஸ் எங்கம்மா' என்று கேட்டு போராடிய பெண் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

சென்னை: சென்னை மெரீனா கடற்கரையில் தமிழ் உணர்வுடன் வீராவேசமாக முழக்கமிட்ட இளம் பெண்ணை மறந்திருக்க மாட்டார்கள் யாரும். உலகப் புகழ் பெற்று விட்ட அவர் தற்போது பெரும் வேதனையில் உள்ளார். காரணம், அவருக்கு அரசியல் முத்திரை குத்தி குறிப்பிட்ட கட்சியினர் அவரை பேஸ்புக்கில் மிகக் கடுமையாக விமர்சித்து வருவதே.
ஆனால் தன் மீதான அரசியல் முத்திரையை முற்றாக மறுத்துள்ளார் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அப்பெண். தான் மிக மிக சாதாரண பெண் என்றும், சாதாரணமான முறையில் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருவதாகவும் கூறியுள்ள அவர், தனக்கும் ஜல்லிக்கட்டுக்கும் உணர்வுப்பூர்வமான நெருக்கம் இருப்பதாகவும், அதன் அடிப்படையில்தான் போராட்டத்தில் கலந்து கொண்டேன் என்றும் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் ஒன்இந்தியா தமிழ் இணையதளத்திற்கு சிறப்பு்ப பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

நான் சாதாரணமானவள்

எனக்கும் எந்தக் கட்சிக்கும் தொடர்பு கிடையாது. அரசியலுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நான் மிக மிக சாதாரணப் பெண்.
எந்தக் கட்சியையும் எனக்குத் தெரியாது. நான் திமுகவும் இல்லை, அதிமுகவும் இல்லை. தமிழ் உணர்ச்சியோடு, தமிழ்நாட்டுக்காக பேச வந்தேன் . தனி ஆளாக மெரீனா போராட்டத்தில் கலந்து கொண்டேன் .

கருப்பு சட்டைதான்

என் பின்னால் நின்றிருந்த நபர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் என்று எனக்குத் தெரியாது . அவர் திமுகவைச் சேர்ந்தவர் என்றெல்லாம் எனக்குத் தெரியாது. அங்கு பலரும் கூடியிருந்தனர். அனைவருமே கருப்புச் சட்டைதான் போட்டிருந்தனர்.

நான் பயப்பட மாட்டேன்

எந்த விமர்சனத்திற்காகவும் நான் பயப்படப் போவதில்லை . சர்ச்சைகளைக் கண்டு நான் பயப்படவில்லை. நான் சர்ச்சைக்குரிய வகையில் பேசவும் இல்லை. எல்லோரையும் போலத்தான் கோஷமிட்டேன்.

வாடிவாசலுக்கு அருகில் என் வீடு

ஜல்லிக்கட்டுடன் உணர்வுப் பூர்வமாக நெருங்கிய தொடர்பு கொண்டவள் நான். ஜல்லிக்கட்டு நடக்கும் ஊர்தான் நானும். வாடி வாசலுக்கு அருகில்தான் எனது வீடு. அந்த உணர்வில்தான் நான் கலந்து கொண்டேன். அந்த உணர்வின் அடிப்படையில்தான் போராட்டத்தில் பங்கேற்றேன்

அவமானப்படுத்தவில்லை

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா அம்மாவை நான் குறிப்பிட்டு விமர்சித்துப் பேசவில்லை. அதேபோலத்தான் பிரதமர் மோடியையும் நான் திட்டமிட்டு விமர்சிக்கவில்லை . அவமானப்படுத்தும் நோக்கில் நான் விமர்சித்து கோஷமிடவில்லை. அனைவரும் எப்படி முழக்கமிட்டார்களோ அதேபோலத்தான் நானும் கோஷமிட்டேன்.

வருத்தம்

என் தமிழ் இனத்திற்காக, ஜல்லிக்கட்டுக்காகத்தான் நான் போராடினேன். உயிருள்ளவரை போராடுவேன். போராட்டத்தின்போது நான் கோஷமிட்டபோது தவறுதலாக தவறான வார்த்தைகள் வந்திருக்கலாம். அது யாரையேனும் வருத்தப்படுத்தியிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

முத்திரை குத்த வேண்டாம்

நான் கட்சி சார்பற்றவள், அரசியல் சார்பற்றவள். ஆனால் பலரும் எனக்கு முத்திரை குத்திப் பேசுவது வருத்தம் தருகிறது. அதை ஒன்இந்தியா தமிழ் இணையதளம் மூலம் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் அப்பெண்.

Blog Archive